வியாழன், 22 ஜனவரி, 2015

 பெருமாள் முருகன் இறந்துவிட்டார் என்று நாளேடுகள் செய்தி வெளியிட்டன. நான் எழுதிய அனைத்தையும் திரும்பப் பெற்றுக் கொள்கிறேன். பெருமாள் முருகன் என்ற எழுத்தாளன் இனி பெ. முருகன் என சாதாரன தமிழ் ஆசிரியராய் இருக்கப் போகிறான். அவனை தனியே விடுங்கள்" - என்ற அறிக்கை பெருமாள் முருகன் என்ற எழுத்தாளனின் இறுதி அறிக்கையாய் வந்தது.

திருச்செங்கோடு:
என்ன சொல்லி விட்டார், என்ன தான் இருக்கிறது. அந்த மாதொருபாகன்மாது ஒரு பாகன்; பாதி பெண்ணாக இருக்கும் ஆண் என்பது எல்லோருக்கும் தெரிந்ததே. அர்த்தநாரி என்னும் சிவசக்தியைக் கொண்ட கோயில் அவர் பிறந்த திருச்செங்கோட்டில் உள்ளது. கடவுள் மறுப்போரும் பெண்ணியவாதிகளும் ஏற்றுக் கொள்ளக் கூடிய ஆண் பெண் சமத்துவத்தை தாங்கி நிற்கும் செம் மலை, திரு செங்கோடு (கோடு - மலை).

வெறுங் கற்பனையா:
எழுதுகிறவன் எது வேண்டுமானாலும் எழுதும் பொழுது, ஏன் நாங்கள் போராட்டம் நடத்தக் கூடாது என்பது தான் கலகக்காரர்களின், கலாச்சாரக் காவலர்களின் தர்க்கமாய் உள்ளது. இது உண்மையா ? ஒரு கலைஞன் தன் மனம் போன போக்கில் படைக்கிறானா ?
நான் படைப்பதனால் என் பேர் இறைவன்என்று கண்ணதாசன் பாட்டு எழுதவில்லையா?
என் இசையில் இருக்கிறது கடவுளின் ரகசியம்என்று மொசார்ட் (Mozart) இயங்கவில்லையா?
ஆக, படைப்பாளி தன் மனம் போன போக்கில் தான் இயங்குகிறானா. இல்லை. ஒரு படைப்பின் கதை மாந்தர் இரு வகைப் பட்டோர். ஒன்று, நம் பார்வையின் எட்டும் தூரத்தில், நம் கைகளுக்கு எட்டும் தூரத்தில் இருக்கும் ஒரு மனிதனின் கதை உருவம். “வாழ்க்கை தான் எழுத வைத்தது, என்னைச் சுற்றிய மக்கள் தான் எழுத வைத்தனர்என்று ஜெயகாந்தனின் பெரும்பாலான யதார்த்த உருவங்கள். இன்னொன்று கொஞ்சம் வேறு வகைப்பட்டது. இந்த இரண்டாம் வகைக் கதை மாந்தர் நம் எண்ணம் எட்டும் தூரத்தில் இருப்பவர்கள். அது என்ன எண்ணம் எட்டும் தூரம். கற்பனை என்பதை வார்த்தை ஜாலம் மூலம் வேறு வகையாகச் சொல்கிறார்கள் என்ற வாதம் வழுக்கக் கூடும். இல்லை. இது வார்த்தை விளையாட்டு இல்லை.
இந்த இரண்டாம் வகைக் கதை மாந்தர் தான் நமக்கு மிகவும் பழகிய நபர்கள். ஒரு கூட்டத்தில், பலர் ஒரு வழியைப் பின்பற்றுவர். சிலர் அந்த வழி தவறு வேறு வழி தான் வேண்டும் என்பர். அந்தப் பலரில் சிலரும், சிலரில் சிலரும் அடுத்த கட்டம் செல்ல முயல்வர். அதாவது, அந்தப் பிரச்சனையை முடிக்கும் வழி செல்வர். இந்த சிறுபான்மைக் கூட்டம் தான், இரண்டாம் வகைக் கதை மாந்தர். இவர்களின் முயற்சி, தனிமை, உலகம் இவர்களால் மாறினாலும் இவர்களை துரத்திக் கொண்டே இருக்கும் மக்களின் கைகளில் இரும்பு விலங்குகள். விடையாய் வருபவர்கள் இவர்கள் என்றாலும், கேள்விகளுக்கு உரிய இடம் தருபவர்கள். இவர்கள் நம் உள்ளக் குமுறல்களின் எதிர் ஒலி. மனதின் ஆழமான இருளின் எதிர் ஒளி.
கவனித்துப் பார்தால், கடையில் நிர்ணய (MRP) விலையைக் காட்டிலும் கொஞ்சம் கூட்டி வைத்து விற்றால், நாம் முதல் வகையில் இருந்தால், எந்த மறுப்பும் சொல்லாது வாங்கிச் செல்வோம். வீட்டிலோ, பிற நண்பர்களுடனோ பேசும் பொழுது மட்டும்என்ன அநியாயம், இதை எலாம் கேக்க யாரு இருக்கா?” என்று புலம்பல்களுடன் தூங்கப் போய் விடுவோம். கனவில் நமக்கு சிறகுகள் முளைக்கும், எட்டி உதைத்ததும் கதவுகள் திறக்கும் (ஒரு வேளை Alarm அடித்தால், நாமே பெரிய விஞ்ஞானியாக மாறி அதைச் சரி செய்வோம்) கடைக்காரன் நம்மிடம் கெஞ்சுவான், நாம் மன்னித்து, அறிவுரை கூறி, (அதிக ஜாக்கி சான் படம் பார்ப்பவர் என்றால் பெறிய சண்டை) பின் வீட்டிற்கு வந்து விடுவோம்).
எல்லாம் சரி. இது கற்பனை தான் வேறு ஒன்றும் இல்லை என்பவர் நிதானிக்க. நம் கற்பனைக் கதை மாந்தர் கூட இதே பண்புகள் கொண்டவர்கள் தாம். உதாரணம்: சூப்பெர் மேன். இவனால் சாதாரண மனிதர் செய்ய முடியாததைச் செய்ய முடியும்.

நம் எண்ணங்கள் தான், அவற்றின் பிரதி பின்பங்கள் தான் இந்த இரண்டாம் வகைக் கதை மாந்தர். இவர்கள், சிறகுகள் முளைக்காது என்று அறிந்தவர்கள். செருப்பு, ரேகை இரண்டும் தேய முயல்பவர்கள். குழந்தைக் கதைகளின் கற்பனையில் இருந்து யதார்த்த வீதியில் வலம் வருகிறவர்கள். இவர்களுக்கும், அந்தக் கட்டுக் கதைகளுக்கும் ஆன விதியாசங்கள் என்னவெனில், குழந்தைக் கற்பனைக் கதைகளில் வருவோர் மந்திரவாதிகள், இவர்கள் பகுத்தறிவாளர்கள். அதனால் தான் தன்னால் முடியாத ஒன்றையோ, தான் செய்ய நினைப்பதை வேரொருவர் செய்தாலோ, அது கற்பனை தான் உண்மையில்லை என்று ஒதுக்குகிறோம். எற்றுக் கொள்ளாது அடம் பிடிக்கிறோம்.

ஆக, முதல் வகைக் கதை மாந்தர் நம்மில் பலர். இரண்டாம் வகைக் கதை மாந்தர் நம்மில் வெகு சிலர் அல்லது நாம் விரும்பியும் மாறமுடியாமல் இருக்கும் ஏக்கத்தின் குரல் (பிறர் அப்படி இருந்தாலும் நாம் ஏற்றுக்கொள்வதில்லை). பெருமாள் முருகனின் மாதொருபாகன் கதை மாந்தர் வெரும் கற்பனையின் விபரீதம் இல்லை என்பது முடிவாகிறது.

நாங்கள் அப்படி இல்லை:
இது நடைமுறையில் இருக்கட்டும். வேரு எங்காவது இப்படி நடக்கும். தழிழ்க் கலாசாரம் என்னாவது என்போர் சற்று நிதானிக்க.

சோளத் தட்டைகள் நன்கு வளர்ந்த்திருக்கும். அறுவடை செய்யாது இருப்பர். விழாவின் அந்த இரவு எவரும் தான் விரும்பியவருடன் தட்டைகளின் மறைவில் உறவு கொள்ளலாம். இது அந்த ஒரு நாள் மட்டுந்தான். அடுத்த நாள் அவரவர் தங்கள் வழியே செல்ல வேண்டும்“. முப்போகம் என்ற சொல் பெண்ணையும் விளைச்சலையும் குறித்ததே.

குழப்பம் வேண்டாம். இது மாதொருபாகன் இல்லை. . சிவ சுப்ரமணியன் அவர்களின் மந்திரமும் சடங்குகளும் என்ற ஆராய்ச்சிக் கட்டுரைகளின் தொகுதி (20 ம் நூற்றாண்டின் இறுதியில் வந்தது தான்). என்ன ஒரே வித்தியாசம், சிவ சுப்ரமணியன் எந்த இடத்தில் இந்த சடங்கு என்று சொல்லவில்லை. இருப்பினும் அவரின் கள ஆய்வு மதுரைக்குத் தெற்கு என்பதால், அங்கு ஓரிடம் என்பது மட்டும் தெளிவு. தமிழ் நாட்டில் வழக்கத்தில் இருக்கும் ஒரு சடங்கு அது என்பதும் தெளிவு (கடவுள் காப்பாளர்கள் யோசிக்க. ஒரு சடங்கை நீங்கள் அசிங்கம் எங்கின்றீர்களே, கடவுள் பெயரில் அதைச் செய்வது யார்இதைப் பற்றி விரிவாகக் கீழே மாதொருபாகன் என்ற தலைப்பில் காண்க).

மேலும், காயல் பட்டினம் என்ற ஊரின் ஒரு குறிப்பிட்ட சமூகத்தினர், பிள்ளைப் பேறு இல்லாது இருக்கையில், கணவர் வீட்டாரில் ஒருவருடன் உறவு கொள்வர் அல்லது திருநெல்வேலியில் ஒரு குறிபிட்ட மருத்துவமனையில் செயற்கைக் கருத் தரித்தல் - Artificial insemination (யாருக்கும் தெரியாமல்) செய்து கொள்வர் என்பது பலர் அறிந்ததே.

கொங்கு வேறு மற்றவர் வேறா:
     இத்தனை ஆதாரங்களும், ஏற்கனவே நடைமுறையில் உள்ள ஒரு வழக்கத்தைத் தான் பெருமாள் முருகன் எழுதியுள்ளார் என்பதை நிரூபித்தாலும், கொங்கு மக்களின் பெரு முழக்கம் நாங்கள் வேறு, மற்றவர் (ஏனைய தமிழர்) வேறு என்பதே. திருநெல்வேலி எங்கே, தீரன் சின்னமலையின் கொங்கு நாடு எங்கே என்பவரும் கவனிக்க. இந்த தர்க்கத்திற்கு இப்படி ஒரு ஆதாரம் இருக்கிறது -

பழனிப் பகுதிக்குறிய வேணாடே திருநெல்வேலி மாவட்ட அம்பசமுத்திரம், திருக்குறுங்குடி, களக்காடு, கோட்டாறு, திருவதங்காடு, பத்மநாபபுரம்………………………………………………………..தனி நாடுகளாக மாற்றம் பெற்றது
பன்மொழிப் புலவர்கா. அப்பாத்துரையார் எழுதியகொங்குத் தமிழக வரலாறுஎன்னும் நூல் இப்படித்தான் சொல்கிறது.

இனி, மாதொருபாகன் பெருமாள் முருகன் கொங்கு நாட்டில், வழக்கில் உள்ள ஒரு நிகழ்வை எழுதியிருக்கிறார் என்பதில் எந்தவித மாற்றுக் கருத்தும் இல்லை என்போம்.

கொங்கு நாடா இப்படி:

கொங்குதேர் வாழ்க்கை அஞ்சிறைத் தும்பி…– இறையனார் (குறுந்தொகை)”

கொங்கு என்றால் மென்மை, மேன்மை, தேன், இனிமை. கொங்கு என்பதே முருகு. காகாவல் / காடு, மீண்டன்வல்லவன்; கா மீண்டன் என்பதே கவுண்டன் எனப் பிறழ்ந்தது என்று கொங்கு மண்டிலம் புகழ் பாடினோம்.

எக்கதிர் வீழினும் கொங்கதிர் சால
எங்கு நெற்கதிர் விளைந்தாலும் கொங்கு நாட்டுக் கதிர் சாலச் சிறந்தது / எந்த சூரியன் மறைந்தாலும், கொங்கு நாடுப்பயிர் வளரும் என மிகைப்படுதுவதும் உண்டு. இதையெல்லாம் கேட்டு வளர்ந்தவர்கள் தான் நாம். இன்று அந்த மேன்மை எங்கே, மென்மை எங்கே.

என்னதான் சொல்லுங்கள், போராட்டம் நடத்துவோம் என்று சொல்லும் முன் இன்னொன்று. பள்ளிக்காலங்களில் நாம் படித்திருப்போம், அதியமான் அவ்வைக்கு நெல்லிக்கனி குடுத்தான் என்று.

சாதலை நீக்கும் அருநெல்லி தன்னைத் தமிழ்ச் சொல் ஒளவைக்கு
…………………………………………………………………………………………………………………………………………………..…மேன்மரபோர்
……………………………………………………………………………………………………………………..…….. கொங்கு மண்டிலமே.”

வேளிர் ஆட்சி (வேளாளன் - Republic) கொண்டு வந்த்தர்க்கோ, காடு செழித்ததர்க்கோ, இனிமையும் அழகும் பேச்சிலும் அழகிலும் கொண்டதர்க்கோ கொங்கர் நாடாகவில்லை. சாதல் நீக்கும் பழம் (நெல்லி) கிடைத்தும் ஓர் அரசன் அதைத் தமிழ் வளரக் கொடுத்ததால். தமிழ் பாடிய புலவன் கபிலன் பாட்டிற்கு ஊர்கள் பல தந்ததால் கொங்கு மேன்மை அடைகிறது என்பது தான் நாம் படித்தது.

மாதொருபாகன்:
இந்த வழக்கம் தமிழ் நாட்டில் பல பகுதிகளில் இருந்தாலும், பெருமாள் முருகன் குறிப்பிட்டிருப்பது வேறு ஒரு காரணத்திற்கு என்பது நமக்குப் புறியும்.

பதினாலாவது நாளில் விழாவில் திருச்செங்கோடு மலையே தெய்வம் தான். அங்கே செல்பவர்கள் எல்லாம் கடவுள் தான். வெவ்வேறு முகத்துடன் சாமி வரும். எந்தச் சாமி குடுத்தால் என்ன? நமக்குத் தேவையானதை சாமி தருகிறதே”.

இது தான் அந்த சர்ச்சைக்கான காரண வரிகள்.
கற்பனை இல்லை,
பழக்கத்தில் இருந்த வழக்கம்
தமிழ் நாட்டில் தான் அந்தச் சடங்கு என்பதெல்லாம் மேலே சொல்லி விட்டோம்.
அடுத்து, நம் மக்களின் குரல், “எங்கள் வீட்டுப் பெண்கள் அப்படி இல்லைஎன்பதே.
நாம் தவற விட்ட இன்னொன்று, பெண்கள் தானாகச் செய்தார்களா இல்லை, மதமும் மூட நம்பிக்கையும் செய்யத் தூண்டியதா என்பதே. அந்த நாளில் அந்த ஊரில் அனைவரும் கடவுள் தான். எந்தக் கடவுள் கொடுத்தால் என்ன என்று சொல்கையில், இது நமக்குப் பழக்கமான போலிச் சாமியார்களின் பித்தலாட்டக் கதைகளின் ஒரு பகுதியாகத்தான் தெரிகிறது.
மதத்தின் பெயரால், கடவுளின் பெயரால், வழக்கத்தின் பெயரால், பெண்கள் ஏமாற்றப்பட்டனர் என்பதையே பெருமாள் முருகன் சொல்லியிருக்கக்கூடும். “சாதியும் நானும்என்ற கட்டுரைத் தொகுதியும் சேர்த்துப் பார்த்தால், இவர் ஒரு மூட நம்பிக்கையை, பெண்கள் வஞ்சிக்கப்பட்டதை, போகப் பொருளாகவே வைக்கப்பட்டனர் என்ற ஆதாரங்களை இந்தப் புத்தகம் மூலம் ஆவணப்படுத்தியிருக்கிறார்.
நாம் அந்த ஆதாரங்களை வழக்கம் போல் அழிக்கத் துடிக்கிறோம்.
ஆக, இந்தக் கலகம், ஒரு குறிப்பிட்ட வகுப்பைப் பற்றி எழுதியதற்கானது என்ற போர்வையில் மதத்தின், சாமியார்களின் கோர முகத்தை வெளிக் கொண்டு வந்ததற்காக நடத்தப் பட்டது என்பதே உண்மை. மதம், சாதி இந்த இரண்டின் போர்வையில் நாம் செய்தது வெளியே தெரிகிறது என்றவுடன் கிழிக்கப்பட்ட முகத்திரையை ஒட்ட முயற்சிக்கிறோம். முகத்திரையைக் கிழித்தவர் மீது திராவகம் வீசுகிறோம்.

எழுதி / எழு தீ:

     எழுத்தாளர்களும்
, சிந்தனைவாதிகளும் தீ போலத் தான் மக்களுக்குத் தெறிவர். நம் பழக்கங்களை, சடங்குகளையும் சேர்த்து நம்மையும் எரித்து விடுவர் என்ற பயம் தேவையில்லை. (தீ தான் மனிதன் கண்டுபிடித்தவைகளுள் முக்கியமான ஒன்று. மற்றவை முன்னேற்றத்திற்கு, தீ பாதுகாப்பிற்கு) எழுதுத் தீ நம்மையும் விலங்குகளையும் வேறுபடுத்துகிறது. மனிதத் தன்மையுடன் மனிதன் இருக்க வழி சொல்கிறது.


எழுத்தாளர்கள் நாளையின் திறவு கோள்கள். நாம் தொலைத்தாலும் பின்னாளில் வேறு ஒரு புரட்சிக் கதவை அது திறக்கும். ஆனால், வாழும் போது அவர்களைத் தொலைத்து விட்டு, அடுத்த நூற்றாண்டில் சிலை வைக்கும் மடமை என்றுதான் ஓயும். ஒரு பாரதிக்கு நாம் இழைத்தது போதும், அந்தப் பாவத்தையே இன்னும் நாம் கழுவவில்லை.