செவ்வாய், 6 ஜனவரி, 2015

எட்டுக்கால் பூச்சி லெபனான் சென்ற கதை.

             
            கல்லூரி விடுதியின் அறை ஒன்றை எனக்கு ஒதுக்கினார்கள் . இரண்டாம் ஆண்டில் ரூம் கிடைப்பது திரிசங்கு சொர்க்கம் மாதிரி, நாமே கட்டிக்கொள்ள வேண்டியதுதான். பின்னர் தான் தெரிந்தது ஒட்டடையோடும், எட்டுக்கால் பூச்சிகளோடும் சீனியர் மாணவர் ஒருவர் விட்டுச்சென்ற ரூம் அதென்று. மனிதன் உயிர் வாழ கொஞ்சம் சிரமம் என்றான பின், சில வருடங்கள் யாரும் அந்த அறையினுள் செல்லும் அபாயத்தை மேற்கொள்ளவில்லை. நடுவில் ஒருவர் அந்த அறையில் தூக்குப் போட்டுக் கொண்டார் என்ற செய்தியும் வந்தடைந்தது.
     ரூம் சுத்தம் செய்யச் சொல்லி ஆயிற்று. சுத்தம் செய்ய முடியாமல், "சார், இந்த ரூம்ல இவ்ளோதான் முடியும்" என்ற பதில் வந்தது. பாளம் பாளமாய் வெடித்திருந்த சுவரும், பாலமாய் தொங்கிக் கொண்டிருந்த ஒயர்களும், முற்றிலும் நீக்கமுடியாத ஒட்டடையும், கொஞ்சம் கூட கரைந்து போகாத கறைகளும், போதும் போதும் என்று அலறிக்கொண்டே சுற்ற முயற்சிக்கும் மின்விசிறியும் என்னை வரவேற்றன.
     மூலையில் கிடந்த புத்தகக் குவியலை ஒரு முறை முறைத்துப் பார்த்தேன். சின்னதாய் ஒரு புத்தகம். நம் புத்தகங்கள் குறைந்தது தலையணை உயரமமாவது இருக்குமே என்ற ஆவலில் எடுத்துப் பார்த்தேன்.

     "பித்தன் - அப்துல் ரகுமான்"

     அரை குறை ஆடையில் முழுதும் கிழிசல்கள். ஆனந்தத் தாண்டவம். ஏளனச் சிரிப்பு. கவலைப் படாத தலை மயிர் - இப்படி ஒரு அட்டைப் படம் அந்தப்  புத்தகத்தில். பார்த்ததும் பிடித்து விட்டது, அட நம்மைப்போல் ஒருவன் இருக்கிறான், தலை முடியைப் பொறுத்தவரை என்ற காரணத்தில்.

    "நான் இருக்கிறேன் என்று சொல்லிக் கொண்டிருக்கும் போதே அது இறந்த காலம் ஆகிக் கொண்டிருகிறது". இதைப் படித்ததும் கொஞ்சம் பித்தம் பிடிக்கத் தான் செய்தது. அப்துல் ரகுமான் என்னைப் பித்தனாக்கிக் கொண்டிருந்தார். அந்தப் பித்தன் எதிர்களின் உபாசகன், இரவுப் பாடகன். வெளிச்சம் போவதால் இரவென்பது இல்லை, இருளில் வெளிச்சம் வந்து பகலாய்த் தெரிகிறது. இருளில் இருந்து தொடங்கு உன் பயணத்தை என்று உண்மையை உண்மையாய்ச் சொல்கிறவன். காலம் காலமாய் நம்மில் கட்டியிருக்கும் சீழை நமக்குக் காட்டுபவன். அந்தப் பித்தன் வேறொன்றைக் காட்டினான்.
   
     புத்தகத்தின் இறுதியில் இப்படி எழுதியிருந்தது. "கலீல் ஜிப்ரான் போன்று எழுதும் கவிஞர்கள்  தமிழில் இல்லையே என்ற என் ஏக்கத்தை கவிக்கோ. அப்துல் ரகுமான் போக்கி விட்டார் - கண்ணதாசன்". அந்தப் புத்தகம் முடிகையில் நான் ஆரம்பித்துக் கொண்டேன் என்றே இன்றும் நம்புகிறேன்.
   
     அது யார் கலீல் ஜிப்ரான் ? அப்படி என்ன எழுதியிருப்பார் ? இந்தக் கேள்விகளுக்கு முதல் பதில் "முறிந்த சிறகுகள்" (Broken  Wings - Kahlil Gibran, 1912). "அந்தக் கல்லறைத் தோட்டத்து வழியாய் செல்பவர்களே, உங்கள் கால்கள் மெதுவாய் நடக்கட்டும். என் காதலியின் தூக்கம் கலையாதிருக்க".
ஜிப்ரானின் மனம் முறிந்த வரிகள், என் அறை எங்கும் சிறகு விரித்துக்கொண்டது. மௌனம் போதுமாய் இருந்தது என்று காதலித்த  ஜிப்ரான் - செல்மாவை லெபனான் காடுகளும், சைப்ரஸ் மரங்களும் நிச்சயமாய் மொழி பெயர்த்து வைத்திருக்கும். அங்கு விரியும் இலைகளில் முறிந்த சிறகுகளின் கனம் இன்னும் இருக்கக் கூடும்.

     தீர்க்கதரிசி (The Prophet - Khalil Gibran, 1923) என்பது ஒரு வகையில் பித்தன் போலவும், பல வகைகளில் ஆலாபனை (- அப்துல் ரகுமானின் இன்னொரு தொகுதி) போலவும் இருக்கும். பித்தன் படித்திருந்தால் ஆலாபனை தானாய்த் தெரியும், ஆலாபனையைப் படித்தால் பித்தனின் தேவை நன்கு புரியும்.
The Prophet கேள்வி பதில் போன்று எழுதப் பட்டிருக்கிறது.
    "உன் வாழ்க்கை தேவைகள் இல்லாதாயின் சூனியம்,
     உன் தேவைகள் அறிவிலாதாயின் தேவையற்றவை,
     உன் அறிவு வேலை செய்யாதிருந்தால் வீண்,
     உன் வேலைகள் மனிதமிழந்தால், இழப்பதற்கு உன்னிடம் வேரெதுவும் இல்லை". இப்படி மனிதம் பாடியிருக்கிறார் ஜிப்ரான்.





"குற்றவாளி தான் குற்றவாளி என்பதல்ல, குற்றங்களே கூட குற்றவாளியாய் இருக்க முடியும். நீங்கள் சட்டம் கொண்டு வந்தீர், அதை மீறவே அதிகம் ஆசைப் படுகிறீர்" என்ற தாக்கும்,  "நீதான் கண்ணாடி - எதுவும் உன்னால் தான் முடிவு செய்யப் படுகிறது" என்ற தர்க்கமும் நீட்சி கொண்டே பித்தன் நூலாக இருக்கும் போல.

     தன் காதல், கவிதைகள், ஓவியங்கள், எண்ணங்களை விட்டுச் சென்ற கலீல் ஜிப்ரான், "அறிவதில் இருக்கிறார் அன்பில் இருக்கிறார் கடவுள்" என்று புத்தகங்களின் பதிப்புப் பங்கை (Royalty) தொண்டு நிறுவனங்களுக்கு விட்டுச் சென்றார். வாழ்வை ரசிக்கிறவன் கவிதை வாசிக்கிறான், கவிதை வாசிக்கிறவன் ஜிப்ரானை ரசிக்கிறான் என்று சொல்லத் தோன்றுகிறது.


கண்கள் மூடுங்கள், உங்கள் அருகிலும் சுற்றிலும் பாருங்கள், உங்கள் முன் கலீல் ஜிப்ரான் இருப்பான்,                                                                                                                                இப்படித் தான் சொல்கிறது கலீலின் கல்லறை வாசகம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக