இந்தப் 'பெருமாளும் பேட்டெரியும் - கடவுளும் கேமராவும்' கதையில், இதை இரண்டாம் பாகம் என்று சொல்வதை விட, முதல் பாகத்தின் இரண்டாவது கோணம் என்று வைத்தால், கொஞ்சம் ஒத்துப் போகும்.
Akira எனும் இயக்குனர் எடுத்த Roshomon படம், ஒரே கதையை வேறு வேறு கோணத்தில் சொல்லும் விதம் பற்றி நன்றாகக் கூறும். தமிழிலில் கூட ஆய்த எழுத்து, விருமாண்டி போன்ற படங்களில், இப்படியான கதை ஓட்டத்தைப் பார்க்க முடியும். அந்த அளவிற்கு இல்லையென்றலும், எதோ கொஞ்சம் ஒப்புக்குச் சப்பாணி கதை சொல்வோம்.
பை:
10.00 AM: சரக். சரக். ஜிப் போடற லட்சணத்தப் பாரு. என வெக்கிறான்? charger மாதிரி இருக்கு. எதுக்கு ரெண்டு. தண்ணி சரி, என்ன புதுசா கர்ச்சீப், மாத்திரை. ஓ. எங்கயோ பார்ட்டி கெளம்பறான்.
10.10 AM: டேய் மெதுவா. இப்படி ஒத்தயா போறமே. நமக்கு ஜோடியா ஒரு லேடி பேக் இருந்திருக்கலாம். வெயில் பரவால, இல்ல இவன் வேர்வதான். நமக்குக் கொஞ்சம் உ ஆ.
11.03 AM: என்ன இவ்வளவு சீக்கரமா திரும்பி வந்துட்டான்.
11. 09 AM: charger பத்தி ஏதோ பேசறான். எனக்குள்ள தான் பாரேண்டா.
1.55 PM: டேய் என்னையும் திரும்பக் கூட்டிட்டுப் போ. போய்ட்டான். சரி, ரெஸ்ட் எடுப்போம்.
பைக்:
10.05 AM: நான் தயார். கொஞ்ச நாளாகவே வெளியே போக வேண்டுமென ஆசை.
10.10 AM: Speed breaker லாம் பாரத்தால் முடியுமா? இன்னும் சற்று வேகமாக. மழையோ வெயிலோ காய வேண்டியதே எம் நியதி. இதில் உனைப் போல் நன்கு பார்த்துக் கொண்டால் நலம். இருந்தும் ஒரு குறை. காற்றைக் கிழித்து என் வேகம் முழுக்க முயன்று பார்க்க வேண்டும்.
ஆனால் நீ, அளவோடு குறைத்துக் கொள்கிறாய்.
10. 20 AM: ர்ர்ர்.. ர்ர்ர். நகர்கிறானா பார். ஆள் வளர்ந்த அளவிற்கு அறிவு வளரவில்லை. இந்த பஸ் டப்பாக்களுக்கெல்லாம் என்னைப் போல் பைக்கைக்கண்டால் அப்படி ஏளனம்.
10.22 AM: வேண்டாம்.
10. 22 1/2 AM: ர்ர்ர்ர்ர்ர்ர்ர்.
10.45 AM: இது தானா? இன்னும் கொஞ்சம் தூரமாய் இருந்திருக்கலாம். இனி நான் காத்திருக்கிறேன். நீ உள்ளே சென்று வா.
SETC (திருநெல்வேலி - அம்பாசமுத்திரம்) பஸ் டிரைவர்:
10. 15 AM: இவனுவ வேற. சும்மா சும்மா உர்ர்ர் உர்ர்னு போவானுவ.
10. 20 AM: பொரப்பா. நீ பாட்டுல போய்க்கிருக்க.
10. 23 AM: பெருசுஏறுவே. அவன் முந்திப் போறாம்ல.
10. 25 AM: நம்மண்டி பொறுத்துப் போவும்யா.
மாடு:
10. 26 AM: இந்தப் பறவைக்குக் கொழுப்பு. நம்மை இம்சிக்கிறது.
10.30 AM: இது யாரு. அசஞ்சு அசஞ்சு நம்மையே பாக்கறான். நம்ம கறுப்புக் கொன்பன் மாதிரி நம்மையும் வண்டில கட்டப் பாக்கறானா?
எருதுக் கூட்டம்:
10. 40 AM: மெதுவா, மெதுவா. மெதுவா.. இது நம்ம வெயில், நம்ம சேறு.
10.42 AM: இந்த விலங்குகள் யார்? நம்மோடு இருப்பது இரண்டு கால்களில் நடக்கிறது. எப்படித்தான் நடக்க வேண்டிய கால்களில் தின்கிறதோ. ஆனால் இப்படி ஒரு கூட்டம் வருகிறது, போகிறது . நடக்காமல் எதோ ஒன்றின் மீது அமர்ந்து. நம்மை அதில் கட்டாதவரை நிம்மதி.
10.45 AM: அட, நம் பையன் நடக்கும் வரை ஓரமாய் இருக்கிறானே. இது போன்ற மற்ற உயிரினங்கள் நமக்காக ஒதுங்காதே.
ஐயர்:
10.47 AM: அய்யர் காலை 8.30 பூசை முடித்துச் சென்று விட்டார், இனி நாளை தான்.
ASI ஊழியர்:
10.48 AM: 'சார், அவர் சும்மா சொல்றார். மூலஸ்தானம் தான் பார்க்க முடியாது. நாம மற்றத சுத்தி பாக்கலாம்'.
10.53 AM: 'இது சிங்கத் தூண், அதுக்குப் பின்னாடி கல்வெட்டு. ஆனா என்னனு கேக்காதிங்க'.
இந்த அளவு கெளம்பி வந்து பாக்க, என்ன காரணமா இருக்கும். இதுல ஏதும் படிப்பாங்க போல. கேட்போம்.
'நீங்க இதுல ஏதும் M. Phil பண்ற மாதிரியா'.
'நீங்க இதுல ஏதும் M. Phil பண்ற மாதிரியா'.
டாக்டரா, "எதுல சார்?"
'Forensic Science தான உண்டு'. அது என்னப்பா forensic medicine.
10.57 AM: 'இங்க, இந்தப் பீடமும் டிசைனும் முக்கியம். இந்த டிசைன் வச்சு தான் வருசம் கணக்கு பண்றாங்க'
டாக்டர்னு சொல்லியாச்சு, ஆர்வம் எப்படி இங்க.
11.02 AM: 'இனிதான் முக்கியமானதெல்லாம் இருக்கு சார். இந்த நாலு சிற்பத்த பாருங்க. நான் கோயில் உள்ள திறக்கறேன்'.
11.05 AM: 'இப்படி தான் சார், சிலருக்கு நடந்திருக்கு. இந்தப் பெருமாள் சக்தி வாய்ந்த தெய்வம்'. நாம சுத்திக் காட்டிடுவோம்.
11.10 AM: ' இதையெலாம் பாக்கறப்ப தெய்வம்னு ஒண்ணு இருக்கு சார். இப்படி கல்ல செதுக்கி வளைக்கணும். இவ்வளவு காலம் பாதுகாப்பா இருக்கு. தவர, உங்க பாட்டரி'.
11. 40 AM: '8.30 to 5.45 சார், வாங்க'. இந்த வெயில்ல போய்ட்டு ஆள் திரும்ப வருவாரா. பாப்போம், வந்தா நமக்கும் பொழுது போகும்.
11.10 AM: ' இதையெலாம் பாக்கறப்ப தெய்வம்னு ஒண்ணு இருக்கு சார். இப்படி கல்ல செதுக்கி வளைக்கணும். இவ்வளவு காலம் பாதுகாப்பா இருக்கு. தவர, உங்க பாட்டரி'.
11. 40 AM: '8.30 to 5.45 சார், வாங்க'. இந்த வெயில்ல போய்ட்டு ஆள் திரும்ப வருவாரா. பாப்போம், வந்தா நமக்கும் பொழுது போகும்.
மணி:
நீண்ட நாட்கள் சென்று விட்டன. நானும் என் பைக்கும் தனியாக கொஞ்ச தூரம் சென்று. 'ஒரு நெடும் பயணம் எடுத்து சன்னலோர மரங்களையெல்லாம் ரசிக்க ஆசைதான்' என்று என் கல்லூரி நாட்களில் எழுதியது நினைவிற்கு வருகிறது. நான் பேராசைக்காரன், சன்னல் தவிர்த்து நேராகவே பார்க்க, பைக்.
நேற்றுப் பெய்த மழையில் குளங்களில் நீர், ஆற்றில் நீர். தாமரை மொட்டையும், எனக்குப் பெயர் தெரியாத இன்னொரு பூவும் சூடி, ஒரு பெண். அடிக்கும் காற்றில் அலையும் முடி. முகம் முழுக்க சிரிப்பும், கருப்பும். கருமை எங்கள் நிறம். அப்பா, சின்னப் பையனும் பெண்ணுமாக அவர்கள் எதிர்த் திசையில் கடந்து போனார்கள். பூ என்பதும் பெண் என்பதும் குழந்தையில் இருந்தே ஆரம்பிக்கிறது போல.
பறவைகளை எல்லாம் மாடுகள் எப்படி பொறுத்துக் கொள்கிறன. என் சந்தேகம், அதைத் தீர்க்க ஒரு கூட்டத்தைத் தேர்ந்து எடுத்து போட்டோ எடுக்க முற்பட்டேன். பறவைகள் மனிதர்களை பொறுத்துக் கொள்வதில்லை போலும்.
அரசுப் பேருந்துகள் சில தாண்டி, ஆட்டுக் கூட்டங்களுக்கு வழி விட்டு, எருதுகளும் வயல்களும் கடந்து, அரிவாள் மீசைகளிடம் வழி கேட்டு போய்ச் சேர்ந்தேன்.
சில உரையாடல்களுக்குப் பின், உள் பிரகாரம் நுழைந்தால், camera - low battery அடித்தது. உடன் வந்த ஊழியருக்கு அது பெருமாள் செயல் ஆகிப் போனது. எவ்வளவு நேரம் கோயில் திறந்திருக்கும் என விசாரித்து, மீண்டும் பாளையங்கோட்டை புறப்பட்டேன். வரும் வழியெலாம் எனக்கு ஒரே யோசனை. சீக்கிரம் அறைக்குச் செல்ல வேண்டும்.
அறைக்கு வந்ததும் நான் முதலில் செய்தது, Nikkon user manual படித்தது.
சட்டெனப் புரிந்தது காலையில் நான் லேப்டாப்பில் காமெராவை சார்ஜ் போடுவதற்கு பதிலாக, இணைத்து மட்டும் வைத்திருக்கிறேன். அப்போதில் இருந்தே சார்ஜ் இறங்கிக் கொண்டு இருந்திருக்கிறது.
மீண்டும் புறப்பட்டேன், இம்முறை வழி பரிச்சயம், எருதுகள் பரிச்சயம், பெருமாளும் பரிச்சயம்.
பக்தவத்சல பெருமாள் கோயில், சேரன்மாதேவி, திருநெல்வேலி.
கடவுள் என்றால் என்ன? - விரைவில்.
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
பதிலளிநீக்கு