ஞாயிறு, 24 நவம்பர், 2013

நேற்று இல்லாத மாற்றம் என்னது

நேற்று இல்லாத மாற்றம் என்னது
காற்று உன் காதில் ஏதோ சொன்னது.
இதுதான் வாழ்க்கை என்பதா
விதியின் வேட்கை என்பதா
சாதியின் சேர்க்கை என்பதா
சொல் மனமே.


கொடியில் பூக்கள் எல்லாம் காம்பு தாங்கும் வரை
கூந்தல் பூக்கள் எல்லாம்  உறவு வாழும் வரை
காதல் நினைவொன்று தானே காற்று தீரும் வரை
மழையின் பயணம் எல்லாம் மண்ணைத் தீண்டும் வரை
படகின் பயணம் எல்லாம் நதியைத் தாண்டும் வரை
மனித பயணங்கள் எல்லாம் வாழ்க்கை தீரும் வரை.



காற்று வழி போவதை நாற்று சொல்கின்றது
நேற்று மழை பெய்ததை ஈரம் சொல்கின்றது
கண்ணில் வழிகின்ற கண்ணீர் காதல் சொல்கின்றது.
கிளைகள் வீழ்ந்தாலுமே இலையில் துளி உள்ளது
இரவு தீர்ந்தாலுமே இன்னும் நிலவு உள்ளது
பாதி உயிர் போன போதும் மீதி வாழ்வுள்ளது..
                                                                                          -  வைரமுத்து.



இந்தப் பாடல் தான் முதன்முதலாக சோகமும் பிரிவும் எனக்கு சொல்லிக் கொடுத்தது. நீண்ட வருடத் தேடலில், மறதியில் சமீபத்தில் தான் இதைக் கண்டுபிடித்தேன்.
காலையும் இரவும் செடிகளோடு சிரித்து, பூக்களைத் தடவி; தனியாய் நான் பார்த்த வான் நிறமும், என்னைக் கடந்து போன பிறைகளும்,  . அந்த நினைவும் நிறமும், துளியும் மாறாமல்..

சனி, 24 ஆகஸ்ட், 2013

நானோர் அசடன் நாளைய கிறுக்கன்.






பார்க்கும் இடமெங்கும்
பாறையின் அந்தகாரம்.
முக்கால் நிலவொளி
முனகும் காற்றொலி.
நெருப்புப் பந்தம்
பறையின் சந்தம்.
காட்டுப் பன்றி கூட்டு மந்தி
தங்க அழகு மிளா
இங்கே கோ உலா.  

வெள்ளை அருவியே கொள்ளைக் கருவியே
வெள்ளி வேலும்
வெள்ளி வாளும்
வெள்ளைக் கொடிகாட்டும்
வெள்ள நீரின்
கள்ளத் தனமோ கள்ளி தனமோ

கடல்கொண்டேன் குடல்தாகம் 
உடல்கொண்டேன் கூடல்தாகம்.
நாடும் எனதோ
வாடும் மனதோ.
அரண்மனை எனதோ எம்மனை இனிதோ.

உன்னை விடுத்து உலகெலாம் வென்று
சரித்திரம் படைத்தேன்
ஒருகுடை ஏற்றினேன்.
யானோ அரசன் யானோ வளவன்
நானோர் அசடன் நாளைய கிறுக்கன்.

இறந்ததும் என்னை 
இங்கே புதையும்
நான் கொண்டுசெல்ல  நினைப்பது 
அகத்திய தமிழும்
அருவி நீரும்.

மறுபிறப்பு இருந்தால்பாறையாய் பிறப்பேன்.
நுரையைத் தாங்கி  கரைந்து போவேன்.

சனி, 10 ஆகஸ்ட், 2013

திருமூலர்

அன்பும் சிவமும் இரண்டென்பர் அறிவிலார்
அன்பே சிவமாவது ஆரும் அறிகிலார்
அன்பே சிவமாவது ஆரும் அறிந்தபின்
அன்பே சிவமாய் அமர்ந்திருந் தாரே.

திங்கள், 17 ஜூன், 2013

வை கை


விருப்பம் ஒன்றான பின்
மறுப்பும் உண்டோ.
அலைபோல் ஆசைகள்,
வலைபோல் சூழ்நிலை,
காற்றில் நிற்கும்
ஒற்றை விதையாய்,
எத்தனை காலம்
எத்தனை பாரம்.
விரும்புதலும் விருப்பமும்
நமக்குள்  ஒன்றாகி,
வளர்ந்த நிறைவில்
வைகை  வெள்ளமோ?
மூச்சுக் காற்று
அரிவையின் செவியில்
அருவியின் சத்தமோ?



அருவியும் சரி 
ஆறும் சரி;
இரத்த ஓட்டத்தை
இரகசியமாய் அதிகரிக்கிறது.
ஆறு ஸ்பரிசம் என 
அருவி காமம் என.. 









பரிபாடல் சொல்லும் அன்பும் ஊடலும், அழகான மதுரையும்; என்னை இனம்புரியா உணர்விற்குக் கொண்டு செல்ல.. இசை நூல் எனும் பரிபாடலின் இந்த பாட்டிற்கு இன்னொரு சிறப்பு, இதற்கு இசை அமைத்த நல்லச்சுதனார் மருத்துவர் என்பது.


(1) விருப்பொன்று பட்டவ(ர் ) (உ)ளநிறை (உ)டைத்தென
வரைச்சிறை உடைத்ததை வையை வையைத்
திரைச்சிறை உடைத்தன்று கரைச்சிறை........




(2) ஆடுவார் நெஞ்சத்து அலர்ந்தமைந்த காமம்
வாடற்க வையை நினக்கு..

                                                          -  நல்லந்துவனார், பரிபாடல் (6 ம்  பாடல்).

ஞாயிறு, 9 ஜூன், 2013

நீ ஆ ? நான் ஆ ?



கடற்கரை மணலில் 
கைவிரல் மணமில் 
நிலவொழுக
அலைசிரிக்க 
முதலில் தொலைவது 
நீயா நானா? 

வாகனப் புகையில்
படிகிற கரியில்
வெயிலடிக்க
நிழல்தர 
முன்னால்  நடப்பது
நீயா நானா?

கேரளத்து சேலையில்
 உன்கை படுகையில் 
கட்டிக்கொள்ளவோ 
கட்டிவிடவோ
முதலில் கேட்டது
நீயா நானா?

கட்டிகொள்ளத் தெரியாதென 
கட்டிவிடத் தெரியாதென 
கோபம் உயர
சண்டை வளர்க்க 
முதலில் சொன்னது
நீயா நானா?

சனி, 1 ஜூன், 2013

உனதலையும் எனதலையும்



முடியும் என்ற நிலையிலும்
முடி ஒதுக்கி - சிலர் 
என்னைத் தேடி வருகையிலும் 
நான் காப்பது ஒழுக்கமல்ல
நேர்மை. 
புலன்கள் அடங்காது
புலம்புகையில்
புத்தி தப்பி சலனமாகையில் 
உன்பெயர்தானே துணையாகிறது.
நானென்பதே  நீதான்
நீயென்பதால் நானும் மனிதன் தான்.




திங்கள், 8 ஏப்ரல், 2013

மனைவி






மருவினிய சுற்றமும் வான்பொருளும் நல்ல 
உருவும் உயர்குலமும் எல்லாம் - திருமடந்தை
ஆம்போ தவளோடு மாகும் அவள்பிரிந்து 
போம்போ தவளோடு போம்.

                                                                            - மூதுரை 
                                                                                 பாடல்  20


மருவினிய சுற்றமும் - சேர்ந்த, சார்ந்த இனிய சுற்றமும் (சொந்தமும், சுற்றி இருப்போரும்), வான்பொருளும் - வானம் போல பரந்த செல்வம்  (அ ) வான் நட்சத்திரங்கள் போல மின்னும் அளவில்லாத செல்வம், நல்ல உருவும் - நல்ல உருவம்  என்பதை மற்றவர் மனதில் நமக்கான உருவம் நல்லதாய் இருக்கும் என, உயர்குலமும்  எல்லாம் - நல்ல குடும்பம் எனும் பெயர் வரவும் (இந்த அனைத்தும்), திருமடந்தை ஆம் போது அவளோடும் ஆகும் - மணப்பெண் (அ ) திருமகள் வருகையில் அவளோடு சேர்ந்து வரும், இருக்கும். அவள் பிரிந்து போம் போது அவளோடு போம்  - அவள் பிரிந்து செல்கையில் அவளோடே சென்று விடும்.

இத்தகைய செல்வம் அனைத்தும் திருமகள் உன்னோடு இருக்கையில் இருக்கும் , அவள் பிரிந்து செல்கையில் அவளுடனே சென்று விடும்.

நல்ல மனைவி இருந்தால் அனைத்தும் இருக்கும், அவள் பிரிந்து போனால்,அதோடு அனைத்தும் பிரிந்து போகும்.

செவ்வாய், 2 ஏப்ரல், 2013

கொக்கோகம் - தோகை விரிக்கும் கரும்பு



நன்னலன்றி வேம்புநுகர் காமத்துரோகிகள் போற்
பின்னையொரு தெய்வத்தைப் பேசாமே - எந்நாளும்
சாற்றுவதும் காமகலை சாதிபதுங் கரணம்
போற்றுவோம் காமனடிப் போது.


இலக்கணம்:
கொக்கோகம் எனும் மதன நூலின் முதல் பாடலாக இந்த வெண்பா அமைந்துள்ளது. இரண்டாம் அடியில் எந்நாளும் என்ற தனிச்சொல் இருப்பதால், இது நேரிசை வெண்பா. நன்னல், பின்னை; சாற்று, போற்று என இரு வேறு எதுகைகள் இருப்பதால் இரு விகற்ப நேரிசை வெண்பா.

பொருள்:
நன்னலன்றி வேம்புநுகர் - கரும்பு இருக்கையில் வேம்பு எடுத்து பயன்படுத்தும் (நன்னல் - கரும்பு) காம துரோகிகள் போல், பின்னையொரு தெய்வத்தை - வேறு தெய்வத்தைப் பற்றி பேசமாட்டேன் (பின்னை - வேறு, பேசாமே- பாடாது, போற்றாது ). சாற்றுவதும் காமகலை - சாற்றும் என்பதற்கு தீர்மானமாய், தீர்க்கமாய் சொல்வது என்று எடுத்துக்கொள்ளலாம். எந்நாளும் சொல்வதும், செய்வதும் (சாதிப்பதும்) காம கலை. அதற்கு காமனைப் போற்றுவோம்.


பின் இணைப்பு :
தோகை விரிக்கும் கரும்பு  இருக்கையில், தோகை விரிக்கும் மணப்பெண் இருக்கையில்; மற்ற நினைவும், சுவைத்திட வேம்பும் ஏற்றதா யோசி இனி.


தோகை விரிக்கும் 
கரும்பு  இருக்கையில்  
தோகை விரிக்கும்
மணப்பெண் இருக்கையில் 
மற்ற நினைவும்
சுவைத்திட வேம்பும்
ஏற்றதா யோசி இனி.


புதன், 20 மார்ச், 2013

அகத்தியம்

முழுமதிக் காட்டில் மூலிகை வாசத்தில், காட்டுப் பன்றிகள் ஓலமிட, உடல் ஒடுங்க,பற்கள் படபடக்க  நடந்து, ஆஆஆஆஆஆஆ அந்த அழைப்பு தான் அந்தச்  சாரல் தான் அந்த அந்தகாரந்தான்,
எத்தனை பேரை இந்த அருவி பதம் பார்த்திருக்கும். எத்தனை பேர் இந்த அருவியில்  பக்குவம் அடைந்திருப்பார்கள்.
அடிமேல் அடியாய் அருகில் சென்று நனைந்து அமர்ந்தேன். நூற்றாண்டுகள் தாண்டிய குரல் கேட்டது. 
இங்கு கொட்டும் அருவிகளில், அகத்தியர் அருவிக்கு ஒரு குணம் உண்டு. எந்த அருவியும் அதற்கும் பாறைக்கும் ஆன இடைவெளியில் நம்மை எளிதில் அனுமதிக்காது. இந்த அகத்தியர் அருவியில் அருவிக்கு உள் சென்று, பாறையில் அமர்ந்து ரசிக்கலாம் அதன் பின்னழகை.
இந்தத்  துளிகள் எவ்வளவு காலம் முன் தோன்றியிருக்கும், எத்தனை உயிர்களை வருடி இருக்கும். நீர் உயிர் நாடிதான், வாழ்க்கைக்கான அமுது தான்.
நான் நாய்களோடு பேசுவேன், நெடு மரங்களோடும் பேசுவேன். இப்போதெல்லாம் பாறைகளுடனும் பேசுகிறேன்.

பாறை சொன்ன கதை, அடுத்து..

வியாழன், 3 ஜனவரி, 2013

4321123443211233211221

 சில நாள் சில வேலை 
சேரும்  இரு பாம்புகள்
பார்த்து உறைந்த
தருணம்.
குளிரில் 
அம்மாவின் அணைப்பில்
எங்கோ ஓடிய எண்ணங்களில்
மறைந்து மறந்து நிறைந்தது நீயோ.
இறந்ததும் எங்கே போவோம் என்றே 
கண்ணீரோடு பயந்த இரவுகளில்
இடுகாட்டில் தேடலில் 
அமைதி.
அமர்ந்த
திட்டுகளின் எறும்புகள் 
முத்தமிட்டு ஊர்ந்து மொழிகையில் 
சாரமோ  மின்சாரமோ பூச்சரமோ 
உன் பெயரோ
நாமோ.
கருங்குயில்
இணைக்காக இரைஞ்ச
இறையாய் விரிந்தது 
மேகமோ.
நட்சத்திரமோ
பூகம்பமோ 
மோகமோ
தேனோ
அ.